மதுக்கடைகளை மூடியதால் வேலையிழந்த 20 ஆயிரம் பேருக்கு மாற்றுபணி வழங்க வேண்டும்
தமிழக அரசு மதுக்கடைகளை மூடியதால் வேலையிழந்த 20 ஆயிரம் பேருக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் உதவித்தொகை, குடிநீர், மின்சாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, பஸ்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட தலைவர் முருகானந்தம், செயலாளர் பாரதி, பொருளாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் நடராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் செயல்பட்டு வந்த 6 ஆயிரத்து 500 மதுக்கடைகளில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக இந்த கடைகளில் பணியாற்றி வரும் இவர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தின்படி எந்தவித பலன்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு சுமார் 4 ஆயிரத்து 341 மதுக்கடைகளை மூடிஉள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்து உள்ளனர். டாஸ்மாக் நிர்வாகம் புதிய கடைகளை திறப்பதற்குரிய இடங்களை தேர்வு செய்யுமாறு நிர்பந்தம் செய்து வருகிறது. எனவே, இந்த பணியாளர்களின் நலன்கருதி, அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும்.
இதற்கான முறையான அரசாணை வெளியிடப்பட வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்து தற்கொலை செய்து கொண்ட பணியாளர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கிய நிர்வாகிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.