மலை வலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும் சிவல்புரி சிங்காரம் பேச்சு

மலை வலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும் என சிவல்புரி சிங்காரம் பேசினார்.

Update: 2017-07-10 22:00 GMT

சிவகங்கை,

காரைக்குடியை அடுத்துள்ள செட்டிநாடு பகுதியில் உள்ள பிரபலமான மலைகளை செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் ஆனிமாத கிரிவலத்தில் ஆன்மிக விழா வைரவன்பட்டியில் நடைபெற்றது. இதில் சென்னை லட்சியம் சிதம்பரம், கரூர் கைலாசம், புதுக்கோட்டை ரவீந்திரன், காரைக்குடி முருகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை செல்வகணேசன், அலமேலு மங்கை சீனிவாசன் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர்.

விழாவில் சிவல்புரி சிங்காரம் பேசும்போது, மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் நமக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையும் உயரும். பவுர்ணமி அன்று நிலவு நிறைந்திருக்கும். எனவே வாழ்க்கை நிறைவாக இருக்க அன்றைய தினம் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒருமுறை சொல்லும் சொற்களுக்கு ஆயிரம் முறை பலன் கிடைக்கும்.

எனவே இறைவனின் திருநாமங்களை அதிகமாக உச்சரிக்க வேண்டும். கூடியவரை எதிர்மறை சொற்களை சொல்ல கூடாது. ‘வேண்டாம்.. இல்லை..‘ போன்ற சொற்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மீது கோபத்தை காட்ட கூடாது. குழந்தைகளை பார்த்து சனியன், குரங்கு போன்ற சொற்களை சொல்லி திட்டக்கூடாது. நாம் சொல்லும் எதிர்மறை சொற்கள் அப்படியே நடந்து விடும். எனவே நிலவு நிறைந்த நாளில் மட்டுமல்லாமல் எப்போதுமே நேர்மறை சொற்களை நாம் சொன்னால் நிகழ்காலம் நமக்கு நன்றாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தேவகோட்டை தனம், புதுகை கண்ணையா, காரைக்குடி வத்ஜலா கண்ணதாசன், திருப்பத்தூர் சந்திரன், இளஞ்செழியன், வேந்தன்பட்டி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்