உடைந்த குழாயை சரிசெய்யக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சென்னிமலை அருகே உடைந்த குழாயை சரிசெய்யக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

Update: 2017-07-10 22:15 GMT

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ளது மேலப்பாளையம். ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் சென்னிமலை அருகே உள்ள ஓட்டப்பாறை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) மற்றும் சென்னிமலை போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

பெருந்துறையில் இருந்து சென்னிமலை பகுதி வரை குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முகாசிபிடாரியூர் மற்றும் மேலப்பாளையம் பகுதிக்கு மட்டும் தனியாக இன்னொரு குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மேலப்பாளையம் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து முறைகேடாக பலர் குடிநீர் இணைப்பு பெற்றனர். இதனால் மேலப்பாளையம் பகுதிக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2013–ம் ஆண்டு ‘நமக்கு நாமே’ என்ற திட்டம் மூலம் ரூ.38 லட்சத்தில் முகாசிபிடாரியூர் அருகே அப்பத்தாள் கோவில் என்ற இடத்தில் இருந்து மேலப்பாளையத்திற்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்து, குடிநீர் தொட்டி கட்டி உட்பட அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் மேலப்பாளையம் பகுதிக்கு இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பழைய குடிநீர் குழாய்கள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக சென்னிமலை–ஈங்கூர் ரோட்டில் கருப்பணன்கோவில் பள்ளம் என்ற இடத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டை குழி தோண்டும் போது மேலப்பாளையம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. ஆனால் அதனை சரி செய்யாததால் கடந்த 10 நாட்களாக மேலப்பாளையம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

நமக்கு நாமே திட்டம் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலமும் தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது எங்களுக்கு குடிநீர் வரும் பழைய குழாயையும் உடைத்து விட்டனர். இதனால் குடிநீரின்றி மிகவும் சிரமப்படுகிறோம். எனவே நமக்கு நாமே திட்டம் மூலம் போடப்பட்ட குழாயில் இருந்து குடிநீர் வினியோகிக்கவும் உடைந்த குழாயை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், ‘இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் 10.30 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்