ஓ.என்.ஜி.சி. வெளியேற வலியுறுத்தி கடையடைப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் இன்று கதிராமங்கலம் வருகை

ஓ.என்.ஜி.சி. வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலத்தில் நேற்று 9-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) அரசியல் கட்சி தலைவர்கள் கதிராமங்கலத்துக்கு வருகை தந்து கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்கிறார்கள்.

Update: 2017-07-09 23:00 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது கதிராமங்கலம் கிராமம். இங்கு இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியால் கதிராமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு தஞ்சை கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு நேற்று 9-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஓ.என்.ஜி.சி. வெளியேற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இன்று (திங்கட்கிழமை) கதிராமங்கலத்துக்கு வருகை தந்து, கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்கிறார்கள். இதையொட்டி இன்று கதிராமங்கலத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஊர்வலம் நடைபெற உள்ளது. கதிராமங்கலம் அருகே உள்ள சிவராமபுரத்தில் இருந்து புறப்படும் ஊர்வலம், கதிராமங்கலம் அய்யனார் கோவிலில் நிறைவடைகிறது. அங்கு கிராம மக்கள்-அரசியல் கட்சியினர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் மற்றும் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதனிடையே அரசியல் கட்சியினர், அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த குழுவில் கதிராமங்கலத்தில் உள்ள மணல்மேட்டு தெரு, வெள்ளாளத்தெரு, கருப்பட்டிதெரு, நருவெளி, பெரிய, சின்ன சாலியத்தெரு, பெருமாள்கோவில் அக்ரஹாரம், பூம்புகார் சாலை, சின்னகடை தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர். 

மேலும் செய்திகள்