தஞ்சையில் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தஞ்சையில் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-09 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பி.எட். கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

போராட்டம் குறித்து மாநில தலைவர் பிரேம்குமார் கூறுகையில், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்பதோடு, இதற்கான அரசாணை உடனே வெளியிட வேண்டும். 200 மாணவர்களுக்கு 1 கணினி ஆசிரியர் நியமிக்க வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை 6-வது தனிப்பாடமாக அறிவிக்க வேண்டும். இதற்கு தனியாக பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்த வேண்டும்.

அனைத்து அரசு மேல் நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல்பாடத்தை நடை முறைப்படுத்தி இதற்கு தனியாக பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்த வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகத்திலும் ஆய்வக உதவியாளர் பணிக்கு பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணியில் அமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது”என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் குழந்தைவேல், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசன், பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி, மாவட்ட தலைவர் நவீன், துணை செயலாளர் புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்