கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை தள்ளுபடி விவசாயிகள் கடனை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கிறது

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் கடனை ரத்து செய்ய மறுக்கிறது என்று அய்யாக்கண்ணு கூறினார்.

Update: 2017-07-09 23:15 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குப்புசாமி தலைமை தாங்கினார். புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில்குமார், தமிழக தலைவர் தங்கராஜ், நிர்வாகிகள் குப்பன், மகேஷ், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசியதாவது:– வருகிற 16–ந்தேதி தமிழ்நாடு விவசாயிகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தப்படுகிறது. அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யும்படி வலியுறுத்தப்படும்.

விவசாயிகள் வாங்கிய கடனை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று கூறினார். ஆனால் திடீரென்று ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார். இது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாநில கவர்னர் கிரண்பெடி இந்த கோப்பில் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.3லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ5½ லட்சம் கோடி தள்ளுபடி செய்ய ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. ஆனால் தமிழக விவசாயிகளின் கடனை ரத்து செய்யவும், நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை டெல்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்