மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 256 வாக்குச்சாவடிகளிலும் நேற்று நடைபெற்றது. கடலூரில் உள்ள வாக்குச்சாவடிகளை சப்–கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு நடத்தினார்.

Update: 2017-07-09 21:45 GMT

கடலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1–1–2017–ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 5–ந் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்ட 18 முதல் 21 வயதுடைய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு பணி கடந்த 1–ந் தேதி தொடங்கியது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுத்து வருகின்றனர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 256 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு வாக்குச்சாடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் மற்றும் விண்ணப்ப படிவத்துடன் இருந்தனர். மேலும் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களும் அமர்ந்திருந்தனர்.

சிறப்பு முகாம் காலை 9 மணிக்கு தொடங்கியது என்றாலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விரல் விட்டு எண்ணும் வகையிலேயே வாக்காளர்களை பார்க்க முடிந்தது. எதிர்பார்த்த அளவில் புதிய வாக்காளர்களை காண முடியவில்லை. முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை சிலர் பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் சிலர் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

கடலூர் கே.என்.சி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியை சப்–கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது புதிய வாக்காளர் விண்ணப்ப படிவங்கள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக எத்தனை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கேட்டறிந்தார். அப்போது கடலூர் தாசில்தார் பாலமுருகன் உடன் இருந்தார். தொடர்ந்து கோண்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்