இயற்கையுடன் இனிய வாழ்க்கை

இயற்கையோடு இணைந்து இல்லற வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள், ஹரி-ஆஷா தம்பதியர். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் அமைந்திருக்கும் இவர்கள் வீடு இயற்கை பின்னணியில் அழகுற காட்சியளிக்கிறது.

Update: 2017-07-09 03:24 GMT
யற்கையோடு இணைந்து இல்லற வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள், ஹரி-ஆஷா தம்பதியர். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் அமைந்திருக்கும் இவர்கள் வீடு இயற்கை பின்னணியில் அழகுற காட்சியளிக்கிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களான இவர்கள் தங்கள் வீட்டையும் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காமல் அதன் சக்திகள் அனைத்தையும் வீட்டுக்குள் பிரவேசிக்கவைத்து கட்டமைத்திருக்கிறார்கள். வீட்டின் சுவரை செங்கற்களாலும், மண்ணாலும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். கதவுகள், ஜன்னல்கள், முன்புற வாசல் சுவரை நிறுவதற்கு மட்டுமே சிமெண்ட் பிரேம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மண்ணால் வீட்டை கட்டி எழுப்பி போதுமான இடைவெளி விட்டிருப்பதால் சூரிய வெப்பம் அறைக்குள் ஊடுருவுகிறது. அதனுடன் காற்றும் கலந்து அறைக்குள் கதகதப்பான சூழலை ஏற் படுத்துகிறது. அதன் தாக்கம் இரவு 11 மணி வரை நீடிக்கிறது. அதன் பிறகு இரவு நேர குளிர்ச்சிக்கு வீடு மாறத் தொடங்கி விடுகிறது. அதனால் இவர்களுக்கு மின் விசிறி தேவைப்படுவதில்லை. ஏ.சி, குளிர்சாதனப்பெட்டியும் பயன்படுத்துவதில்லை.

குளிர்சாதனப்பெட்டிக்கு பதிலாக சமையல் அறைக்குள் குழி தோண்டி பெரிய மண் பானையை புதைத்து வைத்திருக்கிறார்கள். அதனை சுற்றி மணல் நிரப்பி அதில் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறார்கள். இதற்குள் வைக்கும் பொருட்கள் ஒருவாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கிறதாம். டி.வி., மிக்ஸி, கம்ப்யூட்டர், லேப்டாப் என வீட்டில் எல்லா பொருட்களும் இருக்கின்றன. ஆனால் மின்சாரத்தை சிக்கனமாகவே பயன் படுத்துகிறார்கள்.

சாதாரணமாக மற்ற வீடுகளில் 50 யூனிட் மின்சாரம் செலவாகிறது என்றால் இவர்கள் வீட்டில் 4 யூனிட் மின்சாரமே செலவாகிறது. மின் உற்பத்திக்காக சோலார் பேனலையும் நிறுவி இருக்கிறார்கள். வீட்டு சமையலுக்கு அவர்களே உருவாக்கிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறார்கள். கழிவு நீர் உள்பட வீட்டிலுள்ள குப்பைகளை பயன்படுத்தி இயற்கை எரிவாயுவை தயாரிக்கிறார்கள்.

ஹரி கேரள குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆஷா ஆசிரியையாக பணி புரிந்தவர். சுற்றுச்சூழல் மீது கொண்ட காதலால் வேலையை விட்டு விலகி வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இவர்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் மட்டுமின்றி பழங்களும் விளைகின்றன. அவை ரசாயன கலப்பு உரங்களின்றி காய்த்து குலுங்குகின்றன.

இந்த தம்பதியர் 2011-ம் ஆண்டில் வீட்டை கட்டிமுடித்திருக்கிறார்கள். வீட்டை கட்டமைத்த விதம் குறித்து ஹரி சொல்கிறார்.

“கிட்டத்தட்ட ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வீட்டை கட்டியிருக்கிறோம். கதவு, ஜன்னல் அமைப்புகள், மேற் கூரைக்கு மட்டும் சிமெண்டை பயன் படுத்தி இருக்கிறோம். மழைக்காலங்களில் வீட்டின் கூரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கான்கிரீட்டை போட்டுள்ளோம். வீட்டின் கட்டுமான பணியை மழை காலம் முடிந்த பிறகு தொடங்கி கோடை காலத்துக்குள் முடித்துவிட்டோம். எங்கள் வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் அத்தனையும் இருக்கிறது. ஆனாலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துகிறோம்” என்கிறார்.

இயற்கை சூழலுக்கு மத்தியில் இந்த தம்பதியர் வீட்டை வடிமைத் திருக்கும் விதத்துக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது. வனப்பகுதிக்கு அருகில் அழகுற கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டுக்கு பட்டாம்பூச்சிகள், பறவைகளும் படையெடுத்து வருகின்றன. அவைகளையும் பாதுகாத்து ஆஷா உணவளித்து கொண்டிருக்கிறார்.

“நிலத்தை உழுது விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை விட எங்கள் தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகள் ருசியாக இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தங்கள் வீட்டில் தோட்டம் அமைத்து சாகுபடி செய்ய வேண்டும்” என்கிறார், ஆஷா.

மேலும் செய்திகள்