வேலை இல்லாத விரக்தியில் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வேலை இல்லாத விரக்தியில் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-07-08 22:40 GMT
சென்னை,

சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் இளையராஜா(வயது 30). டிரைவரான இவர் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி கொண்டு பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு 1-வது பிளாட்பாரத்திற்கு சென்று பயணிகள் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் பிளாட்பாரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

விசாரணை

இதை பார்த்த அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் இளையராஜாவின் உடலில் பற்றி எரிந்த தீயை கோணி பையால் அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு ஆட்டோ டிரைவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார் இளையராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இளையராஜா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்