உப்பள்ளியில் அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

உப்பள்ளியில் அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

Update: 2017-07-08 21:00 GMT
உப்பள்ளி,

உப்பள்ளியில் அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

நிறைமாத கர்ப்பிணி

உப்பள்ளி தாலுகா மணக்குவாடா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 24). இவருக்கும் கதக் மாவட்டம் அத்தலகேரி பகுதியை சேர்ந்த கரியப்பா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக ஜெயஸ்ரீ கர்ப்பமானார். இதனால் அவர் உப்பள்ளி தாலுகா மணக்குவாடாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயஸ்ரீக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், ஜெயஸ்ரீயை அவருடைய தாய், உப்பள்ளியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதற்காக அவர்கள் மணக்குவாடாவில் இருந்து உப்பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றனர்.

பெண் குழந்தை பிறந்தது

அப்போது அரசு பஸ் உப்பள்ளி அருகே வந்தபோது, ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலியால் அலறித் துடித்தார். இதையடுத்து அரசு பஸ்சை, டிரைவர் சிப்பிகுப்பி அரசு ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாக ஓட்டி சென்றார். அப்போது பஸ் அரசு ஆஸ்பத்திரி முன்பு வந்து நின்றபோது, ஜெயஸ்ரீக்கு பஸ்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் ஜெயஸ்ரீயையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர், தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்