கீழடி அகழாய்வு முடிவுக்கு பின், இந்திய வரலாற்றை திரும்பி எழுத வேண்டும்

கீழடி அகழாய்வு முடிவுக்கு பின், இந்திய வரலாற்றை திரும்பி எழுத வேண்டும் என்று மலேசிய தமிழ் மாணவர்கள் கருத்தரங்கில் பேராசிரியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

Update: 2017-07-08 22:00 GMT
கீழடி அகழாய்வு முடிவுக்கு பின், இந்திய வரலாற்றை திரும்பி எழுத வேண்டும்

மதுரை,

மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், உலக தமிழ் சங்க அரங்கத்தில் மலேசிய பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்காக ‘மதுரையும் தமிழும்‘ என்னும் தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஜ.ஜான்சிராணி வரவேற்று பேசினார். மலேசியா பேராசிரியர் தயாளன், கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறைத்தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ரேணுகாதேவி முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்மொழி இரட்டை வழக்கு முறை கொண்ட ஒரு மொழி. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என இரு வழக்குகள் தமிழ் மொழியில் உள்ளன. எழுத்துத் தமிழே உலக அளவில் தமிழ் மொழியை நிலைபெறச் செய்கிறது. பேச்சுத் தமிழில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வட்டார வழக்கு உண்டு. நம் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கும், நம் தமிழ்மொழிக்கும் சொற்களில் வேறுபாடு உண்டு. இறந்து போன செய்தியை சொல்லும் சொல்லிலேயே அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கேட்பவர் உணரும் வகையில் சொல்லும் வழக்கம் தமிழருக்கு உண்டு. உதாரணமாக சிவலோக பதவி அடைந்தார் என்றும், மவுத் ஆனார் என்றும், கர்த்தரை அடைந்தார் என்றும், அகால மரணமடைந்தார் என்றும் பல சொற்கள் வழக்கில் உள்ளன. ஆண், பெண் பேசும் மொழியில் கூட வேறுபாடுகள் உண்டு என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் பெரியசாமிராஜா பேசும் போது கூறியதாவது:–

மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், தொல்லியல் பொருட்கள் மதுரையின் தொன்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன. புலிமான்கொம்பு கல்வெட்டு சமணர்களுக்கு முன்பாகவே தமிழ் எழுத்துகள் இங்கே வழக்கத்தில் உள்ளன என்பதை எடுத்து சொல்கின்றன. கீழடி அகழாய்வுகள் முடிவு பெற்ற பின், இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டியிருக்கும்.

வைகையாறு கரையில் உள்ள 296–க்கும் மேற்பட்ட கிராமங்கள் 1,000ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. சந்தைப்படுத்துதல், ஒரு பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதல் என ஒரு நகரம் உருவாவதற்கான இரண்டு கூறுகளும் மதுரையில் இருந்துள்ளன என்பதை கீழடி நமக்கு வெளிப்படுத்தி உள்ளது. கீழடியை எவரும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது என்பதே உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் பசும்பொன் பேசும் போது, ராஜேந்திர சோழனின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் மலேசியாவின் கெடா மாநிலத்தில் அகழ்வாய்வுகள் செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ் நூல்களை மலாய் மொழியிலும், சீன மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்றார்.

மேலூர், அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் அம்பை மணிவண்ணன் பேசும் போது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தொன்மை, அதன் வரலாறு, அமைப்பு, சிற்பங்கள், மண்டபங்கள் என அதன் அனைத்து சிறப்புகளையும், மதுரையைச் சுற்றியுள்ள கோவில் பற்றியும் பேசினார். மலேசிய பல்கலைக்கழக தமிழ் மாணவி யுகேஸ்வரி நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் கருணாகரன், அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்