நெல்லையில் நுகர்வோர் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் நீதிபதி தமிழ்வாணன் திறந்து வைத்தார்

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நுகர்வோர் கோர்ட்டை, மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய நீதிபதி தமிழ்வாணன் திறந்து வைத்தார்.

Update: 2017-07-08 21:30 GMT

நெல்லை,

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நுகர்வோர் கோர்ட்டை, மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய நீதிபதி தமிழ்வாணன் திறந்து வைத்தார்.

நுகர்வோர் கோர்ட்டு

நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ரூ.49 லட்சம் செலவில் நுகர்வோர் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி நாராயணசாமி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், கலெக்டர் சந்தீப் நந்தூரி, நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவசூரியநாராயணன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ராணி நன்றி கூறினார்.

பின்னர் மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

விழிப்புணர்வு தேவை

தமிழகத்தில் 1986–ம் ஆண்டு முதல் நுகர்வோர் கோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது 31 நுகர்வோர் கோர்ட்டுகள் உள்ளன. தமிழகத்தில் 10 நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்குரிய நீதிபதிகளை நியமிப்பதற்காக தேர்வுக்குழு கூடி 10 பேரை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பட்டியலை அளித்துள்ளது. தமிழக அரசு விரைவில் நீதிபதிகளை நியமனம் செய்யும்.

நுகர்வோருக்கான சேவை குறைபாடுகள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்கு தொடருகின்றனர். தற்போது நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு வழக்குகள் வருகை அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகளவு செய்ய வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது, அதில் குறிப்பிட்டு இருக்கும் விலை, காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்குவதுடன், பில் கேட்டு வாங்க வேண்டும்.

நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோர், தீர்ப்பில் குறிப்பிடும் தொகையில் 50 சதவீதத்தை கோர்ட்டில் கட்டிவிட்டுதான் மேல்முறையீடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து அவர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்