சிங்கம்புணரி அருகே நீரில் மூழ்கி பிளஸ்–1 மாணவிகள் பலி
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனை நீரில் மூழ்கி பிளஸ்–1 மாணவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்துவடுகசாமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் ஆஷா(வயது 16). தேத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் நிஜாமைதீன் மகள் ரிமாஷாபானு(16). இவர்கள் 2 பேரும் சிங்கம்புணரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். மாணவிகள் 2 பேரும் பிரான்மலையில் நடைபெற்ற கந்தூரி விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றனர். இவர்களுடன் மேலும் 3 பெண்கள் சென்றனர். பிரான்மலையில் உள்ள மலை மீது இருக்கும் மசூதிக்கு மாணவிகள் உள்பட 5 பேரும் சென்றுள்ளனர். அங்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக ரிமாஷாபானு மற்றும் ஆஷா ஆகியோர் ஒதுங்கினர். இதனால் அவர்களுடன் வந்த மற்ற 3 பெண்கள் மசூதிக்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பினர். ஆனால் வெகு நேரமாகியும் ரிமாஷாபானுவும், ஆஷாவும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள், இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் மாணவிகள் காணாததது குறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு தலைமையிலான போலீசார், உலகம்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, எஸ்.வி.மங்கலம், புழுதிப்பட்டி ஆகிய நிலையங்களில் உள்ள போலீசாரும் பிரான்மலையில் ஏறி மாணவிகளை தேடினர். சுமார் 2 மணி நேரம் போலீசார் மாணவிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
பின்னர் பிரான்மலையில் உள்ள ஒரு சுனை நீரில் ஆஷாவும், ரிமாஷாபானுவும் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிங்கம்புணரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் பாறையில் வழுக்கி சுனையில் விழுந்து இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.