பல கோடி ரூபாய் செலவில் ‘குட்டி கனடா’!

கனடா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தங்கள் நாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் சிறிய மாதிரி உருவங்களை உருவாக்கி வருகிறார்.

Update: 2017-07-08 08:55 GMT
டொரான்டோவைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் பிசெனிக்மீஜர் என்ற அந்தத் தொழிலதிபர், திறமையான அடுக்குமாடிக் கட்டிட வல்லுநர் அணியுடன் இணைந்து இந்த ‘குட்டி கனடா’வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

கனடாவின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த முயற்சியை ஜீன் லூயிஸ் மேற்கொண்டிருக்கிறார். ஒட்டாவாவின் பாராளுமன்ற கட்டிட மாதிரிகளை உருவாக்கும் பணியில் கடந்த பல மாதங்களாக இவரது குழுவினர் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் மற்றும் ஒட்டுப்பலகைகளை உபயோகித்து இந்த வடிவங்களை இவர்கள் உருவாக்குகின்றனர்.

வழக்கமான ‘மினியேச்சர்’ மாதிரி கட்டிட அளவில் இவர்கள் பாராளுமன்றக் கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர். நாட்டின் மற்ற முக்கிய பகுதிகளை வடிவமைக்கும் பணியிலும் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற அமைப்பு ஒன்றை 2011-ல் ஜெர்மனியில் கண்டபோது தனக்கு இந்த யோசனை தோன்றியதாக ஜீன் லூயிஸ் கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இவரும் இவரது குழுவினரும் ஒன்டோரியா தென் பகுதியின் பெரும்பாலானவற்றை உருவாக்கி முடித்துள்ளனர்.

அதில், சாலையில் இயங்கும் கார்கள், பாதாள ரெயில் போன்றவையும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ன.

முக்கியமான நெடுஞ்சாலை ஒன்றின் மாதிரியையும் நிஜத்தின் நகலைப் போல உருவாக்கியிருக்கின்றனர். பாராளுமன்ற வளாக அமைப்பை உருவாக்கி முடிவடைந்ததும் ஒட்டாவாவின் மற்ற பகுதிகளும் வடிவமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்துக்கு இதுவரைக்குமே 25 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டதாகவும், கனடாவின் பிற முக்கிய நகரங்களின் மாதிரியையும் உருவாக்கும் தனது கனவை முழுமையாக்க முதலீட்டாளர்கள் உதவ வேண்டும் என்றும் ஜீன் லூயிஸ் கூறு கிறார்.

அடுத்த ஆண்டு, இந்த ‘குட்டி கனடா’வை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வைப்பதற்கு ஓர் இடத்தைத் தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்