ஐரோப்பியர்களின் ‘பரம்பரை’ ரகசியம்

ஐரோப்பிய மக்கள் அனைவரும் கி.பி.768 முதல் 814-ம் ஆண்டு வரை மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த ‘சார்லிமாக்னே’ என்ற மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Update: 2017-07-08 07:51 GMT
மன்னர் சார்லிமாக்னே

இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களில் பலர், தாங்கள் மன்னர் பரம்பரையில் பிறந்தவர்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு பிரபல நடிகர் டேன்னி டையர் தாம் 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மூன்றாவது எட்வர்டு மன்னரின் வழித்தோன்றல் என பெருமையாக அறிவித்தார்.

அதேபோல, பிரபல தொழிலதிபரான சர் ரிச்சர்ட் பிரான்சனும் இம் மாதிரியான ஒரு தகவலை வெளியிட்டார். 768 முதல் 814 வரை மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆண்ட சார்லிமாக்னே மன்னரின் பரம்பரையில் பிறந்தவர் தான் என அவர் கூறினார்.

ஆனால் மரபியல் நிபுணரான டாக்டர் ரூதர்போர்டு, இந்த விவகாரத்தில் பெருமைப்படுவதற்கோ, வியப்படைவதற்கோ ஏதும் இல்லை என்கிறார்.
ஐரோப்பியர்களில் பெரும்பாலானவர்கள் நேரிடையாக சார்லிமாக்னே மன்னரின் வம்சாவளியில் வந்தவர்கள் என்பதும், இங்கிலாந்து மக்களில் பெரும்பாலானோர் மூன்றாவது எட்வர்டு மன்னரின் வழித்தோன்றல்கள் என்பதும் உண்மைதான் என்றார்.

அதோடு, இந்த விஷயத்தில் பிரபலங்களுக்கும் சாதாரண குடிமக் களுக்கும் உள்ள வேறுபாடு, சாதாரண மக்களுக்கு தாங்கள் மன்னர் பரம்பரை என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரங்களும் இல்லை என்பதுதான் என ரூதர்போர்டு கூறுகிறார்.

தமது பரம்பரை குறித்து ஆழமாக ஆய்வு மெற்கொண்டதாகக் கூறும் ரிச்சர்ட் பிரான்சன், மன்னர் சார்லிமாக்னேவுக்கும், தமக்கும் உள்ள பரம்பரை இடைவெளி, 40 தலைமுறைகள் எனவும் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இதேபோன்று இங்கிலாந்து மக்களில் பெரும்பாலானோர் மூன்றாவது எட்வர்டு மன்னரின் 21-வது அல்லது 24-வது தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் ரூதர்போர்டு அறுதியிட்டுக் கூறுகிறார்.

மேலும் செய்திகள்