டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகிலும் மற்றும் சாலாமேடு துரையரசன் நகரிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியதன் விளைவாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலாமேடு ரெயில்வே கேட் அருகில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
மேலும் துரையரசன் நகரில் இருந்த டாஸ்மாக் கடைக்கு பதிலாக மாற்று இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் நிரந்தரமாக கடையை மூடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறினார்கள். அதுவரை அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் துரையரசன் நகரில் இருந்த டாஸ்மாக் கடைக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் தற்போது அதே இடத்திலேயே மீண்டும் கடை திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 30–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குடிப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வந்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழியாக பள்ளி– கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் கடைக்கு செல்லும் பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையினால் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இந்த கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.