சரக்கு, சேவை வரியை கண்டித்து தொடர் போராட்டம் கோவில்பட்டியில் 7–வது நாளாக பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு
சரக்கு, சேவை வரியைக் கண்டித்து கோவில்பட்டியில் நேற்று 7–வது நாளாக பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி,
சரக்கு, சேவை வரியைக் கண்டித்து கோவில்பட்டியில் நேற்று 7–வது நாளாக பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம் நடந்தது. தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிக வரிவிதிப்புபகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு முன்பு 6 சதவீத மத்திய கலால் வரி விதிக்கப்பட்டது. முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 12.5 சதவீத மத்திய கலால் வரி, 2 சதவீத வாட் வரி, 5 சதவீத விற்பனை வரி என மொத்தம் 19.5 சதவீத வரி விதிக்கப்பட்டது.
கடந்த 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு, சேவை வரியில் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலை, முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஒரே வரியாக 18 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால் பெரிய வணிக நிறுவனங்களான முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வரியை அதிகரித்து, அதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலையை முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலையாக மாற்றுவதற்கு ரூ.1½ கோடி செலவில் எந்திரங்களை நிறுவ வேண்டும். இதனால் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளை நடத்த முடியாமல், பெரிய வணிக நிறுவனங்களிடம் விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்புதமிழகத்தில் 30 முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 400 பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உள்ளன. முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் 15 பேர் வீதம் 4,500 பேர் பணியாற்றுகின்றனர். ஆனால் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்களே ஆவர். இந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழிற்சாலைகள் மூடல்எனவே சரக்கு, சேவை வரியைக் கண்டித்தும், இரு தொழிற்சாலைகளுக்கும் முன்பு இருந்தது போன்று வரி வித்தியாசம் இருக்கும் வகையில் சரக்கு, சேவை வரியில் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 5 சதவீத வரி விதிக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், சரக்கு–சேவை வரிவிதிப்பை கண்டித்தும் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கடந்த 1–ந்தேதியில் இருந்து காலவரையற்ற கதவடைப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனால் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள 200–க்கு மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
7–வது நாளாக போராட்டம்நேற்று 7–வது நாளாக பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கதவடைப்பு போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சி.ஐ.டி.யு. வட்டார தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரசல், பாலசுப்பிரமணியன், மோகன்தாஸ், மாரியான், பொன்ராஜ், தெய்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிபாசு, சாலமன், தாலுகா செயலாளர் ரவீந்திரன், விவசாயிகள் சங்கம் சுப்பையா, ராமசுப்பு, மணி, மாற்றுத்திறனாளிகள் சங்கம் முத்துகாந்தாரி உள்பட திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.