ரே‌ஷன் கார்டுக்கு அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் சேலம் கோர்ட்டில் கலெக்டர் சம்பத் ஆஜர்

ரே‌ஷன் கார்டுக்கு அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் சேலம் கோர்ட்டில் கலெக்டர் சம்பத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Update: 2017-07-07 22:30 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த 21.6.2013 அன்று புதிய ரே‌ஷன்கார்டு கேட்டு சேலம் டவுனில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் 1½ ஆண்டுகளாக அலைக்கழிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், 25.11.2014 அன்று மீண்டும் சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்த சுரேஷ், அங்கிருந்த அதிகாரிகளிடம் புதிய ரே‌ஷன் கார்டு வழங்குவதற்கு ஏன் தாமதம் ஆகிறது? என்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் புதிய ரே‌ஷன்கார்டு வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான வேலையில் ஈடுபட முதலில் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை அலுவலகத்தில் இருந்த வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி சுந்தரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதன்பிறகு வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாவட்ட கலெக்டர் சம்பத் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர் சம்பத், கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரி சுந்தரியும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்