கவர்னர் வெளியேறும் வரை போராட்டம் ஓயாது அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்
கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருந்து வெளியேறும் வரை போராட்டம் ஓயாது என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
வில்லியனூர்,
புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) முழு அமைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிரண்பெடிக்கு எதிராக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து எதிரே நடந்த உண்ணாவிரதத்தை காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தொடங்கிவைத்தார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
போராட்டம் ஓயாது
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு உடனே திரும்பப்பெறவேண்டும். மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பா.ஜ.க. வினரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் பிரதமர், குடியரசு தலைவரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் பிரதமர், குடியரசு தலைவரிடம் புதுவை கவர்னரின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி, அவரை திரும்ப பெற கோரிக்கை வைக்கப்படும்.
மக்களுக்கு எதிராக செயல்படும் கவர்னரை எதிர்த்து புதுவையில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக வில்லியனூரில் இன்று (அதாவது நேற்று) போராட்டம் நடக்கிறது. இன்று (வெள்ளிக் கிழமை) நெல்லித்தோப்பு தொகுதியில் உண்ணாவிரதம் நடத்தப்படும். நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 11-ந் தேதி காரைக்காலில் போராட்டம் நடக்கிறது. கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேறும் வரை போராட்டம் ஓயாது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
கவர்னர் தடையாக உள்ளார்
போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், ‘மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளுக்கு கவர்னர்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது. புதுவையில் மக்கள் நலத்திட்டங்களான இலவச அரிசி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை செயல்படுத்த முடியாமல் கவர்னர் தடையாக உள்ளார். ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்’ என்றார். உண்ணாவிரதத்தில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கண்ணபிரான், செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அயூப், முரளிதரன் மற்றும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரத போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.