சில்லரை விலையில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.140 வரை விற்பனை

ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.140 வரை விற்பனை

Update: 2017-07-09 22:30 GMT
சென்னை, 

சில்லரை விலையில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாம்பார் வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் காய்கறிகளின் விலை குறைய தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

கண்ணீர்

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் ரூ.140 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இல்லத்தரசிகளுக்கு, சாம்பார் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

இன்னும் 2 வாரத்துக்குள், அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வந்தால் தக்காளி மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைவதற்கு வாய்ப்பு

இதுகுறித்து கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் துணை தலைவர் சுகுமார் கூறியதாவது:-

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு வரும் காய்கறி லோடுகளின் எண்ணிக்கை 250-ல் இருந்து, தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக 10 முதல் 20 சதவீதம் வரையிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. முகூர்த்த காலம் முடிவடைந்ததும், சந்தைக்கு வரத்து அதிகரித்ததுமே காய்கறிகளின் விலை குறைவதற்கு பிரதான காரணம் ஆகும்.

ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த கன மழையின் காரணமாக, காய்கறிகள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து இன்னும் 15 நாட்களில் புதிதாக பயிரிடப்பட்ட காய்கறிகள் சந்தைக்கு வரும். அப்போது காய்கறிகளின் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தக்காளி மற்றும் சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலை புதிய காய்கறிகளின் வரவை பொறுத்து குறைய வாய்ப்பு உள்ளது.

காய்கறிகள் விலை விவரம்

நேற்றைய நிலவரப்படி காய்கறிகளின் மொத்த விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:- (கடந்தவார விலை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

பல்லாரி வெங்காயம் ரூ.13 முதல் ரூ.18 வரை (ரூ.15 முதல் ரூ.20 வரை), உருளைக்கிழங்கு ரூ.17 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), சாம்பார் வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை (ரூ.80 முதல் ரூ.90 வரை), தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை (மாற்றம் இல்லை), அவரைக்காய் ரூ.25 முதல் ரூ.40 வரை (ரூ.40 முதல் ரூ.50 வரை), பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.60 வரை (ரூ.45 முதல் ரூ.70 வரை), கேரட் ரூ.40 முதல் ரூ.60 வரை (ரூ.60 முதல் ரூ.80 வரை), கத்திரிக்காய் ரூ.15 முதல் ரூ.30 வரை (ரூ.20 முதல் ரூ.40 வரை),

வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை (ரூ.30 முதல் ரூ.40 வரை), புடலங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.30 முதல் ரூ.40 வரை), கோவக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.25 முதல் ரூ.35 வரை), சவ்சவ் ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.25 முதல் ரூ.35 வரை), பாகற்காய் ரூ.25 முதல் ரூ.35 வரை (ரூ.30 முதல் ரூ.40 வரை), சேனைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.45 வரை (ரூ.45 முதல் ரூ.50 வரை), சேப்பங்கிழங்கு ரூ.20 முதல் ரூ.30 வரை (ரூ.25 முதல் ரூ.35 வரை), முருங்கைக்காய் ரூ.30 முதல் ரூ.50 வரை (ரூ.20 முதல் ரூ.30 வரை), தேங்காய் (ஒன்று) ரூ.12 முதல் ரூ.20 வரை (ரூ.15 முதல் ரூ.22 வரை), வாழைக்காய் (ஒன்று) ரூ.7 முதல் ரூ.12 வரை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்