கோர்ட்டில் மோசடி வழக்கில் ஆஜர் இடைத்தரகர் சுகேஷிடம் 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது

கோவை கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜரான இடைத்தரகர் சுகேஷிடம் 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

Update: 2017-07-06 23:15 GMT
கோவை,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்டவர் சுகேஷ் (வயது 35). இவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர், கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜவேலு (40) என்பவரிடம் கர்நாடக மாநிலம் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து, இணை செயலாளர் பேசுவதாகவும், சமையல் உபகரணங்கள் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாகவும் கூறி ரூ.2.43 லட்சம் பெற்று மோசடி செய்தார்.


இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷ் மற்றும் அவருடைய தந்தை சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீனில் சென்றபோது சுகேஷ் திடீரென்று மாயமானார். இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திகார் சிறையில் இருக்கும் சுகேஷை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 22-ந்தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுகேஷை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் ரெயிலில் நேற்று காலை 5.30 மணிக்கு கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சுகேஷை கோவை 2-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் ஆசைதம்பி, இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர். பின்னர் அவர்கள் 60 பக்க குற்றப்பத்திரிகை நகலை நீதிபதி முன்னிலையில் சுகேஷிடம் வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். இதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுகேஷை கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் போலீசார் டெல்லிக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்