குடிநீரில் எண்ணெய் படலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு: கதிராமங்கலம் மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை
குடிநீரில் எண்ணெய் படலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே கதிராமங்கலம் மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியில் பூமியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் கசிவு ஏற்பட்டு எண்ணெய் வெளியேறியது. இதனால் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கதிராமங்கலத்தில் பூம்புகார் சாலையில் உள்ள பொதுகுடிநீர் குழாயில் வந்த குடிநீரில் எண்ணெய் மிதந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தஞ்சையில் கலெக்டர் அண்ணாதுரையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:–
ஓ.என்.ஜி.சி. குழாயில் வேறு உடைப்பு எதுவும் ஏற்படவில்லை. மகாராஜபுரம் மலைமேட்டு தெருவில் குடிநீர் குழாயில் எண்ணெய் கலந்து வருவதாக கிராமமக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். எண்ணெய் படலம் எப்படி நீருடன் கலந்தது? குடிநீர் குழாயில் கசிவு எதுவும் இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகிறோம். இந்த கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணி இன்றே(அதாவது நேற்று) முடிவடையும். எனவே மக்கள் அச்சப்படதேவையில்லை. இந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளோம். மக்களின் அச்சத்தை போக்க அடுத்தவாரம் கதிராமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணி மேற்கொண்ட போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறவில்லை என்று என்னிடம் விவசாயிகள் மனு அளித்து இருக்கிறார்கள். அந்த மனு குறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் பதில் கேட்டு இருக்கிறோம். அந்த பதிலை பெற்று மனுதாரருக்கு தெரிவிப்போம். கதிராமங்கலத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பணி நடக்கும் 2 இடங்களில் மட்டுமே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாசில்தார் தினமும் சென்று மக்களிடம் பேசி வருகிறார். கதிராமங்கலம் இயல்பு நிலையில் உள்ளது. அங்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.