தஞ்சையில் புதுப்பெண் உள்பட 3 பேரிடம் நகை பறிப்பு

தஞ்சையில் புதுப்பெண் உள்பட 3 பேரிடம் நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-07-05 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கணேசன். என்ஜினீயர். இவருடைய மனைவி பத்மாவதி (வயது33). இவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணேசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். பத்மாவதி தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு பத்மாவதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். அப்போது மர்நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பத்மாவதி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பத்மாவதி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அவிலாநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி அம்பிகா (27). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் அம்பிகாவிடம் எங்களின் ஆட்டை காணவில்லை. இந்த பக்கம் வந்ததா? என கேட்டனர். அதற்கு அவர் இல்லை என கூறினார்.

அப்போது 2 சிறுவர்களும் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டனர். உடனே அம்பிகா தண்ணீரை எடுத்து வந்து கொடுத்த போது மர்ம நபர்கள் அம்பிகா கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தனர். அவர் நகையை இறுக்க பிடித்துக்கொண்டார். இதில் பாதி 1½ பவுன் சிறுவர்கள் கையில் சிக்கியது. அவற்றுடன் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அம்பிகா தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் நாராயணன்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி சங்கீதா (25). சம்பவத்தன்று இவர் தஞ்சை பாலாஜிநகரில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துச்சென்றனர்.

இது குறித்து சங்கீதா தஞ்சை நகர தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்