கோலார் தங்கவயல் அருகே உள்ள ராமபுரா கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி கே.செங்கல்ராய ரெட்டிக்கு மணிமண்டபம்

கோலார் தங்க வயல் அருகே உள்ள ராமபுரா கிராமத்தில் கர்நாடக மறைந்த முன்னாள் முதல்-மந்திரி கே.செங்கல்ராய ரெட்டிக்கு மாநில அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது

Update: 2017-07-05 21:00 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் தங்க வயல் அருகே உள்ள ராமபுரா கிராமத்தில் கர்நாடக மறைந்த முன்னாள் முதல்-மந்திரி கே.செங்கல்ராய ரெட்டிக்கு மாநில அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

கே.செங்கல்ராய ரெட்டி

கோலார் தங்கவயல் அருகே உள்ள கேசம்பள்ளா கிராமத்தை சேர்ந்தவர் கே.செங்கல்ராயரெட்டி. இவர் கர்நாடக மறைந்த முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.

இந்த நிலையில் கே.செங்கல்ராயரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கே.எச். முனியப்பா எம்.பி. மாநில அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து கே.செங்கல்ராயரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக கேசம்பள்ளாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமபுரா என்ற இடத்தை மாநில அரசு தேர்வு செய்து உள்ளது.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி, மாநில மகளிர் காங்கிரஸ் துணைதலைவி ரூபா சசிதர், மாவட்ட கலெக்டர் திரிலோக் சந்திரா, தாசில்தார் சத்யபிரகாஷ், தங்கவயல் நகரசபை தலைவர் ரமேஷ்குமார் ஜெயின், தங்கவயல் அபிவிருத்தி குழும தலைவி குமாரி ஆகியோர் மணிமண்டபம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.

முன்மாதிரி மண்டபமாக...


அதன்பின் மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக இருந்த கே.செங்கல்ராய ரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக ராமபுரா கிராமத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது. மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த மணிமண்டபமானது மாநிலத்தின் முன்மாதிரி மண்டபமாக கட்டப்படும்.

மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைப்பார். இந்த மணிமண்டபத்தில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களும் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் பணிகள் தொடக்கம்

இதையடுத்து கே.எச்.முனியப்பா எம்.பி.நிருபர்களிடம் கூறும்போது, என்னுடைய பரிந்துரையின்பேரிலேயே கர்நாடக முதல்-மந்திரி கே.செங்கல்ராயரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடக்கும் என்றார்.

மாவட்ட கலெக்டர் திரிலோக் சந்திரா கூறும்போது, கர்நாடக முதல், முதல்-மந்திரி கே.செங்கல்ராயரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க ராமபுரா பகுதியில் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மூத்த கட்டிட வல்லுனர்களின் அறிவுரையின்படி சிறப்பாக மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும்.

இந்த மணிமண்டபத்தின் அருகில் சமுதாய பவன், பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. மணிமண்டபம் அமைய உள்ள இடத்தின் அருகில் ஒரு ஏரி உள்ளது.

அந்த ஏரியையும் சீரமைத்து சுற்றுலா தளமாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்