பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து, உதைத்த விவகாரம்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது

விஜயாப்புரா அருகே பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த விவகாரத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-05 20:00 GMT

பெங்களூரு,

விஜயாப்புரா அருகே பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த விவகாரத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை நேரில் ஆறுதல் கூறிய மந்திரி எம்.பி.பட்டீல் சம்பவம் குறித்த புகாரை வாங்க மறுத்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணை நிர்வாணப்படுத்தி அடி–உதை

விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா ஹிரேமசாலி கிராமத்தை சேர்ந்தவர் மவுலாலி. இவருடன் கடந்த 3–ந் தேதி பெண் ஒருவர் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த மவுலாலியின் மனைவி சுகரா, அவருடைய சகோதரர் சிகந்தர் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணையும், மவுலாலியையும் அருகே உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த பெண்ணை நிர்வாணமாக்கிய அவர்கள் மவுலாலியை அரை நிர்வாணமாக்கினர்.

மேலும், இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறிய சுகாரா தனது சகோதரர் சிகந்தர் உள்பட சிலருடன் சேர்ந்து அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் காயம் அடைந்தார். இந்த தாக்குதல் காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

6 பேர் கைது

இந்த காட்சிகள் நேற்று முன்தினம் தனியார் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் சார்பில் நேற்று முன்தினம் இண்டி புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சுகரா அவருடைய சகோதரர் சிகந்தர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கினர்.

இந்த நிலையில் தலைமறைவான சுகரா, அவருடைய சகோதரர் சிகந்தர், உறவினர்களான சபானா, பரிதா, இஸ்மாயில் மற்றும் தாக்குதல் காட்சிகளை செல்போனில் படம் பிடித்த சுபாஷ் கத்ரி ஆகிய 6 பேரை நேற்று இண்டி புறநகர் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மந்திரி ஆறுதல்

இதற்கிடையே, மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியும், விஜயாப்புரா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எம்.பி.பாட்டீல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க சென்றபோது இண்டி புறநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவானந்தா புகாரை வாங்க மறுத்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் மந்திரியிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால், கோபம் அடைந்த மந்திரி எம்.பி.பட்டீல், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், புகாரை வாங்க மறுத்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவானந்தா மீதும் உரிய நடவடிக்கை எடுத்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் குமார் ஜெயினுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்