மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் போலீசில் புகார்

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

Update: 2017-07-05 23:00 GMT
சங்கரன்கோவில்,


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 53) மின்வாரிய ஊழியர். இவர் செவல்குளம் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று அச்சம்பட்டி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

உடனே செந்தூர்பாண்டி மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தூர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் செந்தூர்பாண்டியின் சாவில் சந்தேகம் இருக்கிறது என அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்