சீரான குடிநீர் வழங்க ரூ.234 கோடியில் திட்டம்
வேலூர் மாநகராட்சியின் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்க ரூ.234 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் மாநகராட்சியின் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்க ரூ.234 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக 16 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி மத்திய அரசின் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் நகரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் குடிநீர் திட்டமும் ஒன்று. தற்போது வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்கும் போது மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை. இதனால் மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.இந்த நிலையில் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் முதல் மண்டலமான காட்பாடி பகுதியில் ஒருசில இடங்களைதவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநகராட்சி அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு ரூ.234 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பணிகளை தொடங்குவதற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 16 இடங்களில் தலா 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது.பல்வேறு இடங்களில் செயல்படாமல் இருக்கும் குடிநீர் குழாய்களை மாற்றி அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது காட்பாடியில் விடுபட்ட சில பகுதிக்கும் காவிரிநீர் கிடைக்கும். இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் குமார் தெரிவித்தார்.