காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 8 லாரிகள் பறிமுதல்

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-07-04 23:05 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திருப்புட்குழி அருகே வேலூர் மாவட்டம், வாலாஜா ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார். அப்போது ஒன்றன்பின் ஒன்றாக கனரக மணல் லாரிகள் வந்தன. உடனே அவர் அந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். சோதனையில் போலி பில்கள், போலி காசோலைகள் காண்பித்ததை கண்டு திடுக்கிட்டார்.

அந்த லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையொட்டி மணல் கடத்திய 6 கனரக லாரிகளையும் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் பறிமுதல் செய்து போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நிறுத்தி வைத்தார்.

முசரவாக்கம்

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் என்ற இடத்தில் மணலை பதுக்கி வைத்து அங்கிருந்து சென்னைக்கு கடத்துவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி அவரது உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் முசரவாக்கம் ரங்கநாதா விதைப்பண்ணை அருகே சென்றனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 லாரிகள் மூலம் மணல் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் இருந்து டிரைவர் மற்றும் கிளனர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும், 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து பாலுச்செட்டிசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்