குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணைகோரி சென்னையில், பா.ம.க. ஆர்ப்பாட்டம்
குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் எத்தனையோ ஊழல்களை சந்தித்து இருந்தாலும் சமீபத்தில் நடந்த குட்கா ஊழல் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை தடையின்றி விற்பனை செய்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே ஊழல் புகாரில் சிக்கியுள்ளவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும். அரசு தவறும்பட்சத்தில் சி.பி.ஐ. தானாக முன்வந்து இந்த ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதையூட்டும் வஸ்துகள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், குட்கா ஆலைகளும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிச்சயம் குரல் எழுப்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.