கவர்னர் மாளிகையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி ஏற்பு

புதுவையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென்று நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2017-07-04 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலைக்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என அவர்கள் கருதுகின்றனர். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் நியமன எம்.எல்.ஏ. பதவியை நிரப்பிட நடவடிக்கை எடுக்காதது முதல் தவறு. அப்படி இருந்தபோதும் இதுகுறித்து அரசு சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டு இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது என்று ஆட்சியாளர்கள் மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்ட சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று மீண்டும் கவர்னர் மாளிகைக்கு வந்தனர். கவர்னர் கிரண்பெடியை சந்தித்த அவர்கள் பதவி ஏற்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்பின் சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் சட்டமன்றத்துக்கு வந்தனர். நேராக சபாநாயகரின் அறைக்கு வந்த அவர்கள் அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்துப் பேசினார்கள். அப்போது, நியமன எம்.எல்.ஏ.க்களாக தாங்கள் நியமிக்கப்பட்டது குறித்த மத்திய அரசின் உத்தரவினை சபாநாயகரிடம் வழங்கினார்கள்.

மேலும் தங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அவர்களிடம், பதவியேற்புக்கான நடைமுறைகள் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் எடுத்துக்கூறினார். அதன்பின் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், ‘சாமிநாதன் உள்பட 3 பேரும் மத்திய அரசின் உத்தரவினை என்னிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு நான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்றால் புதுவை அரசு சார்பில் மத்திய அரசின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். இந்த உத்தரவினை நான் புதுவை அரசுக்கு அனுப்பி வைப்பேன். அது அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் தான் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும்’ என்றார்.

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது யார்? என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகைக்கு நேற்றிரவு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோர் வந்தனர்.

அங்கு அவர்கள் 3 பேரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் கவர்னர் மாளிகை முன்பு திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பத்திரிகையாளர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அனுமதிக்க கூடாது என கோரி சென்னை ஐகோர்ட்டில் புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில் அவசர அவசரமாக 3 பேரும் கவர்னர் மாளிகையில் வைத்து எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் அதிரடி நடவடிக்கைகள் புதுவை அரசியலில் மேலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்