தன்னிச்சையான நியமன எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைத்து ஜனநாயகத்தை கிரண்பெடி குழிதோண்டி புதைத்துள்ளார்

தன்னிச்சையான நியமன எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைத்து ஜனநாயகத்தை கிரண்பெடி குழிதோண்டி புதைத்துள்ளார் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் கண்டனம்

Update: 2017-07-04 22:15 GMT

புதுச்சேரி,

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் புதுவை அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, சிவா, கீதா ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தீர்மானம் *

டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கிரண்பெடி புதுச்சேரியில் கவர்னராக பதவியேற்ற நாள் முதல் மாநில வளர்ச்சிக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். தற்போது நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக பரிந்துரை செய்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்.

*

சுய விளம்பர அரசியலுக்காக மதவாத சக்திகளை ஊக்குவித்து கொண்டிருக்கும் கவர்னர் கிரண்பெடியை வன்மையாக கண்டிக்கிறோம்.

*

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அனைத்து மக்கள்நலத் திட்டங்களையும் திட்டமிட்டு முடக்கி அரசியல் லாபத்திற்காக மக்கள் மன்றத்தால் புறக்கணிக்கப்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளை நியமன எம்.எல்.ஏ.க்களாக பரிந்துரைத்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

*

அரசியலில் குதிரை பேரம் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் அரசியல் லாபத்திற்காக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி உள்ளது.

*

அரசியல் நாகரிகம் இல்லாமல் மக்களாட்சி தத்துவத்தை மறந்து சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருக்கும் மத்திய அரசு, கவர்னர்களை ஏஜெண்டுகளாக பயன்படுத்தி ஜனநாயகத்தை சீர்குலைத்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

*

மக்கள் விரோதபோக்கோடு செயல்பட்டு கொண்டிருக்கும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், ஜனநாயக மாண்புகளை சீர்குலைத்து நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்த மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய ஜனநாயக உரிமை மீட்பு போராட்டம் நடத்துவது சம்பந்தமாக மத்திய தலைமையிடம் முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

*

கவர்னர் கிரண்பெடி மற்றும் மோடி தலைமையிலான மத்திய அரசின் மாநில உரிமையை பறிக்கும் சர்வாதிகார செயலை மக்கள் மன்றத்திற்கு தெரிவிக்க பிரசாரம், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

மேற்கண்டவாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பெருமாள், ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், புதியநீதி கட்சி பொன்னுரங்கம், இந்திய குடியரசு கட்சி தலைவர் ரத்தினவேலு, படைப்பாளி மக்கள் கட்சி தங்கம், ராஷ்டிரீய ஜனதா தளம் சஞ்சீவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அகமது ஜவாகீர், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்