மயில்கள் வேட்டையாடிய 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

தளி அருகே மயில்கள் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-07-04 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ளது ஆச்சுபாளு. இங்குள்ள காப்புக்காட்டில் சிலர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு மயில்களை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் தளி வனச்சரகர் முருகேசன், வன பாதுகாவலர்கள் செல்வராஜ், மாறன் மற்றும் வேட்டை தடுப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆச்சுபாளு காப்புக்காட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு 3 பேர், இறந்த மயில்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த குண்டாரப்பா என்கிற ராமய்யா (வயது 55), தேவராஜ் (27) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புட்டுராமன் (28) என்பவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் 3 பேரும் மயில்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரிய வந்தது.


இதைத் தொடர்ந்து குண்டாரப்பா, தேவராஜ் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கி ஒன்றும், இறந்த 2 மயில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய புட்டுராமனை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்