மெட்ரோ ரெயில் நிலையங்களின் தகவல் பலகைகளில் இந்தி மொழியை அகற்ற உத்தரவு கன்னட அமைப்பினரிடம் சித்தராமையா தகவல்
மெட்ரோ ரெயில் நிலையங்களின் தகவல் பலகைகளில் இந்தி மொழியை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக கன்னட அமைப்பினரிடம் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
மெட்ரோ ரெயில் நிலையங்களின் தகவல் பலகைகளில் இந்தி மொழியை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக கன்னட அமைப்பினரிடம் சித்தராமையா கூறினார்.
கடும் ஆட்சேபனைபெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தகவல் பலகைகளில் கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்தி மொழியை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மெஜஸ்டிக் மற்றும் சிக்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் மறைக்கப்பட்டு இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையாவை கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயணகவுடா நேரில் சந்தித்து பேசினார். அப்போது மெட்ரோ ரெயில் நிலையங்களில் தகவல் பலகைகளில் இந்தி மொழி பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.
இந்தியை அகற்ற உத்தரவுஅவர் பேசும்போது, “கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தகவல் பலகைகளில் அந்த மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்தி மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சரியல்ல. தகவல் பலகையில் இருந்து இந்தி மொழியை அகற்ற வேண்டும்“ என்றார்.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, “கேரளா, தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி மொழியை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்“ என்றார். மேலும் சித்தராமையாவிடம் கன்னட அமைப்பினர் ஒரு மனுவும் கொடுத்தனர்.