புதைக்கப்பட்ட விவசாயி உடல் தோண்டி எடுப்பு, சாவில் மர்மம் இருப்பதாக புகார்
குடிமங்கலம் அருகே விவசாயி சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால், அவருடைய உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம்,
திருப்பூர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 47). விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து இருந்தார். மேலும் குத்தகைக்கு எடுத்த இடத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கணேஷ், இரவு நேரங்களில் தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். இவர் கடந்த 31.5.2017 அன்று இரவு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். பின்னர் அங்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு வீட்டுக்கு வந்த கணேஷ், வீட்டில் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து கணேஷ் உடலை, அவருடைய அண்ணன் மற்றும் உறவினர்கள் எம். அம்மாபட்டியில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.இந்த நிலையில் கணேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவருடைய அண்ணன்களில் ஒருவரான சிவக்குமார் என்பவர் உடுமலை துணை போலீஸ் துப்பிரண்டு அலுவலகம் மற்றும் குடிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து மடத்துக்குளம் தாசில்தார் தயானந்தன், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலையில், பிரேத பரிசோதனை ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் எஸ். அம்மாபட்டியில் கணேஷ் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று சென்றனர். பின்னர் கணேஷ் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். விவசாயி சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவருடைய பிணம் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.