இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்

இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு 4 கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-04 22:00 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ளது திருவள்ளூர், தட்டனூர், உதயனூர், காரைக்குளம் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த கிராமங்களில் சரவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்ற நிலை மாறி, தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவிற்கு மாறிவிட்டது. இதனால் திருவள்ளூர், உதயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காததால் பெண்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் எடுப்பதற்காக அதிக தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

எனவே தங்கள் பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இன்றளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று திருவள்ளூர், உதயனூர், தட்டனூர், காரைக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள், விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காவிரி கூட்டுக்குடிநீர் சீராக வழங்கக்கோரி இளையான்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையாளர்கள் ரகுவீரகணபதி, அழகுமீனாள், தாசில்தார் செந்திவேல் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது மாவட்ட விவசாய சங்க தலைவர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் வீரபாண்டி, ஒன்றிய தலைவர் சந்தியாகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்