பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்ட தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-07-04 22:45 GMT

வேலூர்,

வேலூர் மாவட்ட தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு என்.எப்.டி.யு. சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். சேவா சங்க தலைவர் ரவி, டி.இ.பி.யு. சங்க தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது 3–வது சம்பள கமி‌ஷனை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பி.டி.டி. லாபத்துடன் 20 சதவீதம் லாபத்தை ஊதிய மாற்றத்துடன் இணைக்க கூடாது. 15 சதவீதம் ஊதிய நிர்ணயம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பாஸ்கர், பலராமன், அல்லிராஜன், சிவராஜ் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்