படித்த இளைஞர்கள் தாமாகவே தொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சு

படித்த இளைஞர்கள் தாமாகவே தொழில் தொடங்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாமில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

Update: 2017-07-04 23:00 GMT
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நாகர்கோவில் கிளை அலுவலகத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்காகவும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவு படுத்துவதற்காகவும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்காகவும், புதிய தொழில் நுட்ப மேம்பாட்டிற்காகவும், பல்வேறு சிறப்பு திட்டங்களின் வாயிலாக கடன் உதவி வழங்கி வருகிறது.

இன்றைய காலத்தில் படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை தேடி செல்கிறார்கள். ஆனால், அரசு பணியிடங்கள் மிகவும் குறைவாக உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு கடுமையான போட்டிகள் இருக்கிறது. எனவே, வேலைவாய்ப்பு கிடைக்காத படித்த இளைஞர்கள் தாமாக தொழில் தொடங்க வேண்டும்.

நினைவு பரிசு

இதற்கு அரசு ஆதரவு வழங்குகிறது. அதோடு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதை தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தொழில் முனைவோர் கடன் தவணையை கடந்த 7 ஆண்டுகளாக சரியான முறையில் திருப்பி செலுத்திய 24 பேருக்கு, நினைவு பரிசுகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதன்மை மண்டல மேலாளர் கணேச ராஜாராம், நாகர்கோவில் கிளை அலுவலகத்தின் மேலாளர் சுந்தரேசன், மாவட்ட முதன்மை அலுவலர் ஜான்பிரைட், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து, மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தின் சங்கத்தலைவர் கோபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்