வெல்டிங் தொழிலாளி அடித்துக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூரில் வெல்டிங் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-07-03 23:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 37), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை குழந்தைகள் 3 பேரும் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர். யுவராஜ் வேலைக்கு செல்லாததால் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சத்யா தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றார். அந்த நேரம் யுவராஜ் வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து சத்யா குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தபோது யுவராஜை காணவில்லை. நண்பர்களை பார்ப்பதற்காக வெளியே சென்றிருப்பார் என எண்ணிய சத்யா, வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் சத்யாவிடம், உனது கணவர் யுவராஜை யாரோ தாக்கி பச்சை குளம் மண்டபத்தில் போட்டு சென்றிருக்கிறார்கள் என தெரிவித்தனர். இதை கேட்ட சத்யா பதறி அடித்தபடி அங்கு சென்று பார்த்தார். அங்கு யுவராஜ் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மர்ம நபர்கள் யாரோ அடித்துள்ளனர். மேலும், கல்லால் தாக்கி இருக்கிறார்கள். இதில் அவரது தலை மற்றும் உடல்களில் காயங்கள் இருந்தன.

இதையடுத்து யுவராஜை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து யுவராஜின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், கொலையுண்ட யுவராஜின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

ஓசூரில் தேர்பேட்டை பச்சைகுளம் பகுதியில் சிலர் அடிக்கடி கூடி மது குடித்தல், சீட்டு விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை அடித்துக்கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்