34 சினிமா தியேட்டர்கள் மூடல் 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 34 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.

Update: 2017-07-03 23:00 GMT
நாமக்கல்,

இந்தியா முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து உள்ளது. இதன்படி ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீத வரியும், அதற்கு மேலான டிக்கெட்டுக்கு 28 சதவீத வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தமிழக அரசு கேளிக்கை வரி என உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 30 சதவீதம் வரி வசூலிக்க சட்டம் கொண்டு வந்து உள்ளது.

நாடு முழுவதும் ஒருமுனை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரைப்படத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனவே கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

34 சினிமா தியேட்டர்கள் மூடல்

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல்-6, ராசிபுரம்-3, பரமத்திவேலூர்-3, திருச்செங்கோடு-4, பள்ளிபாளையம்-5, குமாரபாளையம்-6, மல்லசமுத்திரம்-2 மற்றும் மோகனூர், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், சோழசிராமணி, எருமப்பட்டி பகுதிகளில் தலா ஒரு தியேட்டர் என மொத்தம் 34 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதன் மூலம் நாள்ஒன்றுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்