கலெக்டர் அலுவலகத்திற்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த 4 கிராமமக்கள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-07-03 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் ஊராட்சி நல்லாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூறி உள்ளோம். மேலும் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடமும் கூறியிருந்தோம். ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டமங்கலம் ஊராட்சியில் தாங்கள் (கலெக்டர்) ஆய்வு செய்தபோது எங்களது ஊர் பொதுமக்கள் சார்பில் குடிநீர் இல்லை என கூறினோம். அதற்கு தாங்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினீர்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களது ஊரின் அவல நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


வையப்பமலை அருகே உள்ள மொஞ்சனூர் கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மொஞ்சனூர் கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மழை இல்லாததால் வறண்டு விட்டன. எனவே அதை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


புதுச்சத்திரம் அருகே உள்ள லக்கபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

லக்கபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதால், எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


இதேபோல நருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

நருவலூர் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மழை இல்லாத காரணத்தால் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. எனவே எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே எங்கள் பகுதிக்கு தனியாக ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரே நாளில் 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்