முதலை கடித்து முதியவர் சாவு குளித்து கொண்டிந்த போது ஆற்றுக்குள் இழுத்து சென்றது
கும்பகோணம் அருகே குளித்து கொண்டிருந்த போது முதலை கடித்து முதியவர் உயிரிழந்தார்.
திருப்பனந்தாள்,
தஞ்சைமாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை காலனி தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 65). இவர் அணைக்கரை மீன் மார்க்கெட் பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் செல்லதுரை நேற்று காலை கொள்ளிடம் தெற்கு கரையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றுக்குள் இருந்து ஒரு முதலை வெளியே வந்து செல்லதுரையின் கழுத்தில் கடித்து, அவரை ஆற்றுக்குள் 10 அடி ஆழத்தில் இழுத்து சென்றது. இதை பார்த்து அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலை மூலம் ஆற்றில் தேடினர். ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு செல்லதுரையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பனந்தாள் போலீசார், செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்க வரும் மக்களை அடிக்கடி முதலை கடிக்கும் சம்பவமும், குடியிருப்பு பகுதிகளில் முதலைகள் புகுந்து வருகிற சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.