பழனியில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்து அமைப்புகளை கண்டித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனி,
பழனியில் கடந்த 28–ந் தேதி கன்றுகுட்டிகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவாரூரைச்சேர்ந்த மடாதிபதி சம்பத்குமார ஜீயர் தடுத்து பழனி நகர் போலீஸ் நிலையத்தில் அந்த வாகனத்தை ஒப்படைத்தார். மேலும் மிருகவதை செய்யப்படுவதாகவும் புகார் அளித்தார். இதன் காரணமாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்கு போடக்கூடாது என வலியுறுத்தியும், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகளை கண்டித்தும் பழனி பஸ் நிலையம் ரவுண்டான முன்பு தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலு, தி.மு.க. நகர செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்து அமைப்புகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.