அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 10 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது

அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகம் 10 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

Update: 2017-07-03 22:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகர தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. இதற்கு நகர செயலாளர் ராஜப்பா தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

அவர் பேசும்போது, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. ஆளுங்கட்சியினர் மக்கள் நலனை விட்டுவிட்டு, பணத்தை சுருட்டுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மீது அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அமைச்சர்கள் செய்த தவறுகளை தெரிந்துகொண்டு, அவர்களை மிரட்டி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் 10 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி தர மறுக்கிறார்கள். எனவே தற்போதைய மத்திய, மாநில அரசுகளை மாற்ற வேண்டும். வருங்கால சந்ததிகளின் நலனுக்காக தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்