கோவை மண்டலத்தில் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 169 தியேட்டர்கள் மூடப்பட்டன

தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டலத்தில் உள்ள 169 தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டு இருந்தது.

Update: 2017-07-03 22:15 GMT

கோவை,

கடந்த 1–ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது. இதில் சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 20 முதல் 30 சதவீத கேளிக்கை வரி விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த கேளிக்கை வரி விதிப்பிற்கு தமிழக தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த வரியை ரத்து செய்யக்கோரி தியேட்டர்களை மூடப்போவதாகவும் அறிவித்தனர். இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தது. இந்த தியேட்டர்களுக்கு முன்பு அனைத்து காட்சிகளும் ரத்து என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும்தியேட்டர்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து கோவை மண்டல தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:– மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியாக சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் வரி விதித்தது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதனிடையே தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 20 முதல் 30 சதவீத வரி விதித்து உள்ளது. இதன்காரணமாக நாங்கள் 58 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியதுள்ளது. மேலும் இந்த வரிகளால் சினிமா டிக்கெட்டுகள் கட்டணம் கடுமையாக உயரும். இதனால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்க வாய்ப்புள்ளது.

எனவே தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகிறோம். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 169 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது.

தமிழக அரசு இந்த கேளிக்கை வரியை திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தியேட்டர்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்ததால் சினிமா பார்க்க வந்த பொதுமக்கள் அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்