ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் அதிகாரி கைது
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
தானே மாவட்டம் கல்யாண்– டோம்பிவிலி மாநகராட்சியின் ‘ஜே’ வார்டுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஒருவர், தனக்கு சொந்தமான கட்டிடத்தில் மாற்றம் செய்து கட்டி வருகிறார். இது தொடர்பாக அவர், மாநகராட்சியில் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி வார்டு பெண் அதிகாரி சுவாதி என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், அந்த நபரை அழைத்து பேசினார்.
அப்போது அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டிடத்தை சீரமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டார்.
அதிகாரி கைதுஇதற்கு அந்த நபர் ரூ.25 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். இதற்கு பெண் அதிகாரி சுவாதியும் சம்மதம் தெரிவித்தார். இந்தநிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின்படி நேற்றுமுன்தினம் அந்த நபர் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகில் அதிகாரி சுவாதியை சந்தித்து ரூ.25 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கி வைத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுவாதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.