பெண் கைதி கொலை வழக்கில் கைதான ஜெயிலர், சிறைக்காவலர்கள் சிறையில் அடைப்பு
பெண் கைதி கொலை வழக்கில் கைதான ஜெயிலர், சிறைக்காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பை,
மும்பை பைகுல்லா சிறையில் அண்மையில் மஞ்சுளா என்ற பெண் கைதி மர்மமான முறையில் இறந்தார். அவரை சிறை அதிகாரிகள் அடித்து கொன்றுவிட்டதாக மற்ற பெண் கைதிகள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையிலும் ஈடுபட்டனர்.
நாக்பாடா போலீசார் பெண் கைதிகள் 200–க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஷீனா போரா கொலை வழக்கு கைதி இந்திராணி முகர்ஜியும் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு உள்ளார். கைதிகளை வன்முறைக்கு தூண்டியதாக அவர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.
சிறையில் அடைப்புஇதற்கிடையே உயிரிழந்த கைதி மஞ்சுளா சிறை அதிகாரிகளால் உடல்ரீதியாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே அவரை துன்புறுத்திய ஜெயிலர் மனிஷா, சிறை காவலர்கள் பிந்து, வாசிமா சேக், சீத்தல், சுரேக்கா, ஆர்த்தி ஆகிய 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நேற்றுமுன்தினம் ஜெயிலர் உள்பட 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து நேற்று அவர்கள் மும்பை கில்லா விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.