திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

வாணாபுரத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2017-07-02 22:30 GMT
வாணாபுரம்,

வாணாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் வாணாபுரம், வரகூர், மெய்யூர், சே.கூடலூர் மற்றும் தென்குப்பலூர் என 26 கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கூலி வேலைக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் மர்ம நபர்கள் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை தடுக்க வாணாபுரம் போலீசார் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். விழிப்புணர்வு பிரசாரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து போலீசார் கிராம புறங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் சப்- இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்