நள்ளிரவில் குடிநீர் வழங்குவதால் அவதி: புலம்பும் மதுரை மாநகர மக்கள்

நள்ளிரவில் வழங்குவதால் அவதி குடிநீர் எப்போது வரும், எப்படி வரும் என புலம்பும் மதுரை மாநகர மக்கள்

Update: 2017-07-02 21:30 GMT

மதுரையில் போதிய மழையில்லாமல் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீரும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. மதுரையின் குடிநீர் ஆதாரமான வைகை அணையும் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோடை காலம் தொடங்கும் முன்பே குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவது ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கபட்டது. பின்னர் இந்த முறையை மாற்றி 2 தினங்களுக்கு ஒரு முறை என்றானது. சில நாட்களிலேயே 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எப்போது தண்ணீர் வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாத நிலை உருவாகி உள்ளது.

தினசரி லாரி மூலம் தண்ணீர் வழங்க தொடங்கிய சில நாட்களிலேயே ஒருநாள் விட்டு ஒருநாள் என்று மீண்டும் குழாய் தண்ணீர் வழங்கும் அதே முறை லாரிகளில் தண்ணீர் வழங்கி வந்தனர். பல இடங்களில் அவரவர் வசதிக்கேற்ற நேரங்களிலும், நள்ளிரவு வேளையில் தண்ணீர் வழங்குகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என குடும்பத்தினர் அனைவரும் இரவு பொழுதை தாரைவார்த்து தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது என்று புலம்புகின்றனர்.

இதுகுறித்து மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில், பந்தியில் சாப்பிட அமர்ந்த வேளையில் கடைசி இலைக்கு வரும்போது சாப்பாடு தீர்ந்து போகும் என்ற நிலையே குடிநீர் வழங்கப்படுவதில் உள்ளது. இதனால் மீண்டும் வரிசையை தொடர வேண்டியதுள்ளது. பகலெல்லாம் வேலைக்கு சென்று வீடு திரும்பினால் நிம்மதியாக தூங்க முடியாமல் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.

வில்லாபுரத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியதாவது:– குடிநீர் பிடிப்பதற்காக பெண்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் இரவு தண்ணீருக்கும், காலை, மாலையில் வீட்டுக்கும் மீதி நேரம் அலுவலக வேலையும் பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. நாங்கள் என்ன பாவம் செய்தோம் ஏன் இந்த தண்டனை. மின்சார துண்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுவது போன்று தண்ணீர் வழங்கும் நாள், நேரம், போன்றவன்றை முன்கூட்டிய அறிவித்து, இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு தெருவிற்கும் குழாய், லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவதை முறையாக கண்காணித்து கடைப்பிடிக்க வேண்டும். சரியாக செயல்படுத்தாதவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லோரது இரவு பொழுதையும் தண்ணீரே குடிக்கின்றது என்றார்.

மதுரையில் தினசரி குடிநீர் கோரி எங்காவது ஒரு வீதியில் சாலை மறியல் செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. நேதாஜி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மணி என்ற வாலிபர் கூறுகையில், நீர் நிலைகள் வறண்டுவிட்டன, நிலத்தடி நீர் குறைந்து வருகிறது என்பது நன்றாக எங்களுக்கும் தெரிகிறது. நான் மதுரை எங்கும் சுற்றி வருகிறேன். பலவீதிகளில் பெண்கள் காலிக்குடங்களுடனும், ஆண்கள் இருசக்கர வாகனங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளிலும், தெருக்களிலும் குழாய் நீரும், லாரி தண்ணீரும் எந்த தடையும் இன்றி கிடைக்கிறது. அது எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டால் அதை, இதை காரணம் கூறி சமாளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்