நீர்வரத்து காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்வு

நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது.

Update: 2017-07-02 22:00 GMT

ஆண்டிப்பட்டி,

போதிய மழை இல்லாததால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் குறைந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாத இறுதியில் 21 அடியாக குறைந்து விட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையில், கடந்த மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் அதிகரித்தது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதற்கிடையே கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பல வாரங்களுக்கு பிறகு வைகை அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. தொடர்ந்து வினாடிக்கு 200 கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் வரத்து இருப்பதால் வைகை அணை நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வைகை அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 23.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 248 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 180 மில்லியன் கனஅடியாக இருந்தது.

மேலும் செய்திகள்