மாவட்டம் முழுவதும் இதுவரை 1¾ லட்சம் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வினியோகம்

மாவட்டம் முழுவதும் இதுவரை 1¾ லட்சம் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வினியோகம் 50 சதவீதத்திற்கும் அதிகமான பிழைகள்

Update: 2017-07-02 22:15 GMT

தேனி,

தேனி மாவட்டம் முழுவதும் இதுவரை 1¾ லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்டுகளில் பிழைகளுடன் கார்டுகள் அச்சடித்து வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் ரே‌ஷன் கார்டுகளுக்கு பதில், ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 88 ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக சென்னையில் இருந்து இதுவரை 1 லட்சத்து 95 ஆயிரத்து 828 ஸ்மார்ட் கார்டுகள் அச்சடித்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கார்டுகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ரே‌ஷன் கடைகள் மூலமாக கார்டுகள் வினியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்மார்ட் கார்டு தயாராகி விட்டால் சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி சென்று விடும். குறுஞ்செய்தி வந்தவுடன் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைக்கு சென்று ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கார்டுகள் முழுமையாக அச்சடித்து வராத நிலையில், பலருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி வந்து விட்டது. இதனை கொண்டு ரே‌ஷன் கடையில் காட்டினால், ஸ்மார்ட் கார்டு வரவில்லை என்று மக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், தேனி மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்டுகளில் பிழைகள் உள்ளன. சிலருக்கு பெயர், புகைப்படம் மாறி உள்ளது. பலருக்கு பெயர், முகவரி பிழையாக உள்ளது. இவற்றை இ–சேவை மையங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் இ–சேவை மையங்களுக்கு ரே‌ஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய தொடர்ந்து மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். எனவே, இனிமேல் அச்சடிக்கக்கூடிய கார்டுகளையாவது பிழைகள் இன்றி அச்சடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்